நாரதர் புராணம்

 நாரதர் புராணம் 


பகுதி 8 


சனி பகவானின் பார்வை ஒரு நாள் நாரதர் கயிலாயம் சென்றனர். அங்கு தேவர்கள் எல்லாம் வல்ல இறைவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். ஆனால் சனி பகவான் மட்டும் பகவானுக்கு முதுகைக் காட்டிய வண்ணம் உட்கார்ந்து இருந்தார். இதன் காரணத்தை அறிய நாரதர், தக்க சமயம் பார்த்து பார்வதி தேவியிடம் சென்று, இது பற்றிக் கூறி விளக்கம் கேட்டார். ஆனால் தேவியோ ஈசனைக் கேட்டுக் கூறுகிறேன். நாளை வந்து தெரிந்து கொள்ளுங்கள் என்றாள். அவ்வாறே ஈசனிடம் இதுபற்றி தேவி கேட்க, ஈசன் அவர் அப்படித்தான் அமரவேண்டும் என்றார். அது நம்மை அவமதிப்பது போல் இருக்கிறது. எல்லோரையும் போல் அவரும் நம்மைப் பார்த்தே அமரட்டும் என்றாள் தேவி ஈசனிடம். மறுநாள் சபையில் சனி எல்லோரையும் போல ஈசனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதைப் பார்த்த பார்வதியின் மீது சனி பகவானின் பார்வையும் பட்டது. பிறகு பார்வதி தன் ஆசனத்தில் அமரச் சென்றாள். அங்கே இரண்டு ஆசனங்களில் சிவனும், பிரமனும் ஐந்து தலைகளுடன் அமர்ந்திருந்தனர். யார் சிவன் என்று அறிய முடியவில்லை. பின்னர் தன்னுள் சிவனைத் தியானித்தாள். இதனை உணர்ந்த சிவபெருமான் சனி பகவானைத் திரும்பி அமரும்படிக் கூற அவரும் திரும்பி அமர்ந்தார். உடனே பார்வதிக்கு இருந்த குழப்பமும் நீங்கியது. சிவபெருமான் தன் தேவியிடம், சனியின் பார்வை பொல்லாதது. நமக்கே இந்நிலை என்றால் மற்றவர்களைப் பற்றிக் கூறுவானேன். அதனால்தான் சனியை முகத்தைக் காட்டாமல் திரும்பி உட்காரும்படிக் கூறினேன் என்றார். பார்வதியும் சமாதானமடைந்தாள். மறுபடியும் நாரதர் பார்வதியைக் காண வர, பார்வதி விடை பகன்றாள். ஆனால் நாரதர் தன்னால் தானே ஏற்பட்டது என்று கூறி தன்னை மன்னிக்கக் கோரினார். மேலும் சனி பகவானின் பார்வை பற்றித் தெளிவாக தெரிந்து கொண்டதாகக் கூறினார். இலங்கை வேந்தன் இராவணன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, வரங்கள் பெற்று, தேவர்களையும் நவக்கிரகங்களையும் கூட அடக்கி, தனக்கு ஏவல் செய்யச் செய்தான். அவனது அரியாசனத்தில் ஒன்பது படிக்கட்டுகளிலும் ஒரு கிரகம் வீதம் கவிழ்ந்து படுக்கவைத்திருந்தான். அவற்றின் முதுகின் மீது கால் வைத்து அரியாசனம் ஏறிவந்தான். இதனால் நாரதர் மனம் நொந்து இந்த அவல நிலைக்கு ஒரு வழி காண எண்ணினார். அடுத்த முறை இராவணனைக் காணச் செல்லும்போது அவனிடம் அங்குப் படிகளாக படுத்திருப்பவர்கள் யார் என்று கேட்டு அவர்கள் நவக்கிரகங்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களில் கவிழ்ந்து படுத்திருப்பவர்களில் சனியைக் காட்டி அது யார்? என்று கேட்டார். அப்போது அந்தப் படியில் படுத்திருந்த சனி பகவான் மெல்லத் தலையைத் தூக்கினான். மேலும் நாரதர் இராவணனிடம், அவனது இழிநிலை அவனுக்குத் தெரியவில்லை. எனவே, அவனை மட்டும் மேல் நோக்கிப் படுக்கச் சொல்லி, அவன் மார்பில் காலை வைத்து அழுத்தி ஏறிச் செல். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும். அவன் கர்வம் அடங்கும் என்றார். அதுதான் சரியான தண்டனை என்று மகிழ்ச்சியுடன் இராவணன் சனியனை மல்லாந்து படுக்கச் சொன்னான். அப்போதே அந்த சனீஸ்வரனுடைய பார்வை இராவணன் மீதுபட அவனுக்கு அழிவு காலம் தொடங்கியது. இவ்வாறு சனியின் முழுப்பார்வை இராவணன் மீது விழ அவன் அழிந்து போனான். மேலும் பல புராண நாயகர்கள் சனி பார்வையால் பாதிக்கப்பட்டனர். கிருஷ்ணன் மீது சனி பார்வை 1. ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணன் பாமா, ருக்மணியுடன் அமர்ந்திருக்க சனி பகவான் உள்ளே நுழைந்தார். பகவானும் அவரை வரவேற்றார். அப்போது சனி மன்னிக்க வேண்டும். நாளை முதல் தங்களுக்குச் சனி தசை ஆரம்பமாகின்றது என்று கூற, சரி என்று கூறி சனியை வழி அனுப்பினார் கிருஷ்ண பரமாத்மா. இரண்டு நாள் கழித்துச் சனி சறுபடியும் சவுக்கியம்தானே என்று கேட்டுக் கொண்டு வர, பகவான் கேலியாக உன்னுடைய தசை ஆரம்பமாகி விட்டதா? என்று கேட்டார். அதற்குச் சனி கூறினான், நேற்றே தங்களைப் பற்றிக் கொண்டேனே. உலக ரட்சகராகிய தாங்கள் கேவலம் ஒரு பிள்ளைப் பூச்சியாக மாறி சாக்கடையில் போய் ஒளிந்து கொண்டீரே, அது போதாதா, இன்னுமா துன்புறுத்த வேண்டும் என்று அனுதாபத்துடன் கூறிவிட்டு அவ்விடம் விட்டகன்றான் சனி பகவான். (சனி பொல்லாதவன், வந்தனை செய்தால் மனமிரங்கி அருள் செய்வான். ஐஸ்வர்யங்களையும் தருவான்). 2. இராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தார். 3. பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அஞ்ஞான வாசமும் அனுபவித்தனர். சனி தசையின் போதுதான் நளன் புஷ்கரனுடன் சூதாடித் தோற்று நாட்டை இழந்தான். அரிச்சந்திரன் மனைவி மகனை விற்று சுடுகாட்டில் வெட்டியானாக இருந்ததும் சனி தசையில்தான். சோதிடர்கள் சனியின் பார்வை கொடூரமானது என்கின்றனர். எனினும் பொங்கு சனி, மங்கு சனி, தங்கு சனி என்று மூன்று வகையில் சனியினால் ஏற்படும் பலன் பற்றியும் கூறப்படுகிறது.



Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?